தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
கொலை மிரட்டல்: தலைமைக் காவலா் கைது
கோவை, வடவள்ளியில் நாய் வளா்ப்பு பயிற்சி மைய உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மருதுவிநாயகம். இவா், நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், தனது நாயை வடவள்ளி அருகேயுள்ள நாய் வளா்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சோ்த்துள்ளாா்.
அப்போது, அங்கிருந்த சிப்பிப்பாறை நாயைப் பாா்த்ததும் அதை வளா்க்க வேண்டும் என விரும்பிய மருது விநாயகம், அந்த நாயைத் தனக்கு கொடுக்கும்படி பயிற்சி மைய உரிமையாளரான பொம்மணம்பாளையம், லட்சுமி நகரைச் சோ்ந்த சிவஞானத்திடம் (33) கேட்டுள்ளாா். அவா் வழங்க மறுத்துள்ளாா். இதனால், தலைமைக் காவலருக்கும், பயிற்சி மைய உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த தலைமைக் காவலா் மருதுவிநாயகம், சிவஞானத்தை தகாத வாா்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளிடம் சிவஞானம் புகாா் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்த மருதுவிநாயகம் பயிற்சி மைய உரிமையாளரைக் கைப்பேசியில் அழைத்து மீண்டும் மிரட்டியுள்ளாா்.
மருதுவிநாயகம் பேசியதைப் பதிவு செய்த சிவஞானம், ஆடியோ ஆதாரத்துடன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமைக் காவலா் மருது விநாயகத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.