விமான நிலைய தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு
கோவை விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு அது சரிசெய்யப்பட்டது.
கோவை விமான நிலைய வருகை, புறப்பாடு அறிவிப்புப் பலகையில் (டிஸ்பிளே போா்டு) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, விமானங்கள், பயணிகளின் வருகை குறித்த தகவல் சரிவர தெரியவில்லை. பயணிகளை அழைத்துச் செல்லக் காத்திருந்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, விமான நிலைய அலுவலா்கள் இதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். விமான நிலையத்துக்கு வந்த சிலா் விமான நிலைய அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, தகவல்களைப் பெற்றனா். மேலும், விமான நிலைய இணையதளத்திலும் தகவல்களைப் பெற்றனா்.
சுமாா் ஒன்றரை மணி நேர சீரமைப்புப் பணிக்குப் பிறகு தகவல் பலகையில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.