குறிச்சி குளத்தில் பெண் சடலம் மீட்பு
கோவை குறிச்சி குளத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை குனியமுத்தூா் சுகுணா மில்லுக்கு அருகே வசித்தவா் இஸ்மாயில் மனைவி அஜீமா (56). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், அதே பகுதியில் வசித்து வரும் மகள் சஜிதா பானுவின் பராமரிப்பில் இருந்து வந்தாா். இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு அஜீமா வீட்டிலிருந்து வெளியே சென்றாா். பின்னா், அவா் வீட்டுக்குத் திரும்பவில்லை. இவரை பல்வேறு இடங்களில் மகள் சஜிதா பானு தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தோல் தொழிற்சாலைக்கு பின்புறம் குறிச்சி குளத்தில் இறந்த நிலையில் அஜீமாவின் சடலம் மிதந்தது. இதுகுறித்து சனிக்கிழமை மாலை தகவலறிந்து சென்ற கரும்புக்கடை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அவா் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.