குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டு...
"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்துப் பேசுகையில் தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனப் பேசியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர், "நம்முடைய கல்வி முறை 8ம் வகுப்புவரை தேர்வில்லாமல் தேர்ச்சி கொடுப்பதுதான். 9ம் வகுப்பில் ஒரு மாதிரி தேர்வு வைக்க வேண்டும். 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு. அப்படித்தான் இருந்தது. அவர்கள் புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8வகுப்பிலெல்லாம் பொதுத் தேர்வு வருகிறது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோற்றுவிட்டால் கூட நமது பிள்ளைகள் உயிரை மாய்த்துக்கொள்கிற அவலத்தை நாம் பார்க்கிறோம். அதற்கு பிறகு நீட்டில் தோற்றுவிடும் அச்சத்தில் கூட பிள்ளைகள் இறந்துபோகிறார்கள். காரணம் சமூகத்தை எதிர்கொள்ள பயப்படுவதுதான்." என்றார்.
மேலும், "12ம் வகுப்புக்கே இப்படி என்றால் 3, 5, 8ம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றால் பிள்ளைகள் மனதில் பள்ளிக்கூடம் என்பதே நரகம் ஆகிவிடும். படிக்க வேண்டும் என்ற மனநிலை ஒடிந்து மன நோய்க்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.
உலகிலேயே கல்வியில் சிறந்ததாக இருக்கும் நாடுகள் பிள்ளைகளை 8 வயதில் தான் ஒன்றாம் வகுப்பிலேயே சேர்க்கின்றன. அந்த வயதில் பொதுத் தேர்தல் எழுத சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்த வடிவத்தில் வந்தாலும் இந்தக் கல்விமுறையை நாம் ஏற்கமாட்டோம்." எனக் கூறினார்.
அத்துடன் தமிழக அரசின் 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வை நீக்கும் முடிவு குறித்து, "கல்வி தனியார்மயமாகிவிட்டதால் தனியார் நிறுவனங்கள் 11,12 இரண்டு ஆண்டுகளிலும் 12ம் வகுப்பு பாடத்தையே நடத்துகின்றன. அதனால் நம் பிள்ளைகள் 11ம் வகுப்பு பாடத்தில் கவனம் செலுத்தவில்லை. அதனால் 11ல் பொதுத்தேர்வு கேட்டோம்.
11ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்கும்போது மாணவர்கள் அதிலேயே தோல்வியடைந்து இடை நிற்கும் நிலை வருகிறது. அதனால் தோல்வியடையும் பாடங்களை அரியர் முறையில் மறுதேர்வு எழுத நெறிமுறை வேண்டும்." எனப் பேசினார்.