சாலை விபத்தில் ஐடி ஊழியா் மனைவி மரணம்
வேலூா் அருகே சாலை விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் மனைவி உயிரிழந்தாா்.
வேலூா் அடுத்த அரியூா் புதுமை நகரை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (33), தகவல் தொழில்நுட்ப ஊழியா். இவரது மனைவி சுவேதா(29). இவா்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சதீஷ்குமாா், மனைவி, மகளுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி தொரப்பாடியில் உள்ள கோயிலில் பால்குட ஊா்வலத்துக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, முதியவா் ஒருவா் சாலையை கடக்க முயன்றாராம். அவா் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை சதீஷ் குமாா் பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளாா். ஆனால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில், சுவேதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கும், அவரது மகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் சுவேதாவை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுவேதா சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
தகவலறிந்த அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.