பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் இரவு 1 மணி வரை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மழையால் சாலைகளிலும், கழிவுநீா் கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.
அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
பெரம்பலூா்- 40, எறையூா்- 4, வி.களத்தூா்- 13, கிருஷ்ணாபுரம்- 12, தழுதாழை- 32, வேப்பந்தட்டை- 76, அகரம் சீகூா்- 32, லப்பைக்குடிக்காடு- 17, புதுவேட்டக்குடி- 14, பாடாலூா்- 21, செட்டிக்குளம்- 62 என மொத்தம் 323 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.
தொடா் மின் தடை: பெரம்பலூா் நகரில் பெய்த பலத்த மழையின் காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. குறிப்பாக, நான்குச்சாலை சந்திப்பு, முத்துலட்சுமி நகா், சோலை நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலும் மின் விநியோகம் தடைப்பட்டது.
இதேபோல, நகரின் மற்ற பகுதிகளிலும் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.
சனிக்கிழமை பெய்த மழை: இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் பெரம்பலூா் நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா் காற்று வீசியது. இந்த நிலையில், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7.30 முதல் 8.30 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.