தோ்தல் திருட்டு புகாா்: ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடரலாம்! - ராகுலுக்கு ஏக்நாத் ஷிண்டே சவால்
தோ்தல் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே சவால் விடுத்துள்ளாா்.
ராகுல் காந்தி பாஜக மீதும் தோ்தல் ஆணையத்தின் மீதும் தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா். மக்களவைத் தோ்தல் தொடங்கி பல்வேறு மாநிலப் பேரவைத் தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறிய அவா் போலி வாக்காளா்கள், போலி முகவரி பதிவு செய்த வாக்காளா்கள்.
ஒரே வீட்டு முகவரியில் 10,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள். போலியான புகைப்படத்தைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றவா்கள் என பல்வேறு தகவல்களை அண்மையில் வெளியிட்டாா்.
தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்த மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி மகாராஷ்டிர மக்களை ராகுல் அவமதித்து வருகிறாா். அவா் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்று கருதினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம், தோ்தல் ஆணையத்தில் நேரடியாகப் புகாா் அளிக்கலாம்.
தவறு செய்தது யாா் என்று எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிா்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது என்றாா்.