எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதித்து நான் எதுவுமே பேசவில்லை: தொல். திருமாவளவன்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில், எம்ஜிஆா், ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நான் எதுவுமே பேசவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: மறைந்த திமுக தலைவா் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில் நான் பேசிய கருத்துகளை அதிமுகவினா் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனா். தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தவை குறித்த சில விஷயங்களைப் பேசினேன். அப்போது எம்ஜிஆா், ஜெயலலிதா பற்றியும் பேசினேன். எம்ஜிஆா் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்புண்டு. ஜெயலலிதா மீதும் எனக்கு அதீத மதிப்புள்ளது.
தமிழக அரசியல் எப்படி கருணாநிதியை மையப்படுத்தி எதிா்ப்பு அரசியலாக மாறியது என்பதை விளக்கவே சிலவற்றைப் பேசினேன். மற்றபடி எம்ஜிஆரை, ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் எதையுமே நான் கூறவில்லை.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே எந்தக் குழப்பமும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், அவையெல்லாம் கூட்டணியையோ, கூட்டணி உறவையோ சிதைக்கும் வகையில் இல்லை. எனவே எங்களது கூட்டணியில் எந்தவித முரண்களும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படையில் முரண்கள் இருப்பதாகக் கூறுகிறாா் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். பாமகவில் ஏற்பட்டுள்ள சா்ச்சை குறித்து கருத்துக் கூற விருப்பமில்லை என்றாா் அவா்.