Doctor Vikatan: கண்களில் ஸ்ட்ரோக் வரும் என்பது உண்மையா?
Doctor Vikatan: என்னுடைய தோழியின் அப்பாவுக்கு கண்களில் ஸ்ட்ரோக் வந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்ததாகவும் சொல்கிறாள். கண்களில் ஸ்ட்ரோக் வருமா, அதன் அறிகுறி எப்படியிருக்கும், எப்படி சரி செய்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். கண்களில் ஸ்ட்ரோக் என்ற பிரச்னை கண் மருத்துவர்கள் அடிக்கடி பார்க்கும் நிகழ்வு.
கண்களில் ஏற்படும் ஸ்ட்ரோக்கில் 'சென்ட்ரல் ரெட்டினல் ஆர்ட்டரி ஆக்லுஷன்' (Central Retinal Artery Occlusion (CRAO) மற்றும் 'பிரான்ச் ரெட்டினல் ஆர்ட்டரி ஆக்லுஷன்' (Branch Retinal Artery Occlusion (BRAO) என இரண்டு வகை உண்டு.
'சென்ட்ரல் ரெட்டினல் ஆர்ட்டரி ஆக்லுஷன்' பிரச்னை சற்று ஆபத்தானது. இதில் ரத்த ஓட்டம் தடைப்பட்டால் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். உடனடியாக பார்வை தெரியாமல் போய்விடும்.
உடனடியாக மருத்துவரைச் சந்தித்து மசாஜ் செய்து, மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இப்படிச் செய்தால் பார்வை திரும்ப வர குறைந்தபட்ச வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதைத் தவறவிட்டால், பார்வை பறிபோய்விடும்.
'பிரான்ச் ரெட்டினல் ஆர்ட்டரி ஆக்லுஷன்' வகையில், கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஒருவித தடை ஏற்படலாம்.

கண்களுக்கு ரத்த ஓட்டத்தைச் செலுத்தும் அதே ரத்த நாளங்கள்தான், மூளைக்கும் ரத்தத்தைச் செலுத்துகின்றன. இதில் திடீர் தடை ஏற்படும்போது பார்வையிழப்பு ஏற்படும்.
பார்வை மங்கத் தொடங்கும். கறுப்பு நிற திட்டுகள் போலத் தெரியும். காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரியலாம். பாதிப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அதைப் பொறுத்து அறிகுறிகளும் வேறுபடும்.
முதல் வகையைவிட, இரண்டாவதில் பார்வையைத் திரும்பப் பெறும் வாய்ப்புகள் ஓரளவு அதிகம்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடலியக்கம் இல்லாத வாழ்க்கைமுறை போன்றவை, கண்களில் ஸ்ட்ரோக் வருவதற்கான ரிஸ்க் காரணிகள்.
ரெட்டினா எனப்படும் விழித்திரையில் இருந்து தகவல்கள் புராசெஸ் செய்யப்பட்டு, பார்வை நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் வழியே மூளைக்கு அனுப்பப்படும்.
மூளையில் உள்ள 'ஆக்ஸிபிட்டல் கார்டெக்ஸ்' (occipital cortex) என்ற இடத்துக்குப் போய்தான் தகவல்கள் புராசெஸ் செய்யப்படும்.

ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடை ஏற்படும்போது அதற்கேற்ப, பார்வை மங்குதல், தசைகள் முடங்கிப்போவது, பார்வை இரண்டிரண்டாகத் தெரிவது, ஏதேனும் மிதப்பது போல உணர்வது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது இதயநல மருத்துவர் மற்றும் கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகள் வந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.