Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல...
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை
ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்காகவே இந்தியா மீது கூடுதல் வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார்.
இதனிடையே, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை அடுத்தடுத்து சந்தித்து டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இன்று செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிகப்பெரிய அழுத்தத்தை டிரம்ப் கொடுத்துள்ளார். இந்தியா மீது கூடுதல் வரி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.
இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது சிறந்த முன்னேற்றமாக இருக்கும். அது நடக்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார். ரஷியா - உக்ரைன் தலைவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று உறுதி அளிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வர்த்தகத்தை மிக சக்திவாய்ந்த முறையில் டிரம்ப் பயன்படுத்தினார் என்று லீவிட் தெரிவித்தார்.