Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல...
மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதி முதல் முறையாகவும், ஜூலை 5 ஆம் தேதி 2 ஆவது முறையாகவும், ஜூலை 20 ஆம் தேதி 3 ஆவது முறையாகவும், ஜூலை 25 ஆம் தேதி 4 ஆவது முறையாக மேட்டூர் அணை அடுத்தடுத்து நிரம்பியது. அதன் பிறகு மழை குறைந்த காரணத்தாலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடரந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர் மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.
இந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக கடந்த இரண்டு நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 36,242 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 8 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.08,529 கனஅடியாக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 117.45 அடியாக இருந்த நீர் மட்டம் புதன்கிழமை அதிகாலை முழு கொள்ளளவன 120 அடியாக உயர்ந்தது. நள்ளிரவில் நடப்பு ஆண்டில் 5 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,08,529 அதிகரித்துள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 90,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கனஅடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 68,700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் மேல்மட்ட மதகுகள் வழியாக திறக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி எம்.சி.உள்ளது.