ராஜஸ்தான்: கணவனைக் கொன்று டிரமில் உப்பு போட்டு அடைத்து தப்பி ஓடிய பெண்; காதலனுடன...
விருதுநகர்: பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்; 4 மணிநேரப் போராட்டம்; ரூ.14 லட்சம் நஷ்டம்; என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சாமிக்காளை. இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் வைக்கோல் கட்டுகளை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காலை வைக்கோல் கட்டுகளை லாரியில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டிற்குச் சென்றார்.

பின்னர், அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது குறித்து சாமிக்காளை உடனடியாக வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் காரணமாக வைக்கோல் கட்டுகள் முழுவதிலும் தீ பரவிக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் சேதமடைந்த வைக்கோல் கட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கூமாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.