செய்திகள் :

Sanitary Workers: 'தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிநிரந்தரம்?' - திருமாவளவனின் கருத்து சரியா?|In Depth

post image

தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்கள் போராடியவர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல் துறை.

இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட இந்தக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தன.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - கைது
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - கைது

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டக்களத்துக்குச் சென்றபோதும், அதன்பின்னரும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், ``குப்பை அள்ளுகிறவர்களை பணி நிரந்தரம் செய்து, அந்தத் தொழிலையே நீங்களே செய்து கொண்டிருங்கள் என்று சொல்லுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

சாக்கடையைச் சுத்தம் செய்கிறவனே சாக்கடையைச் சுத்தம் செய்யட்டும் என்கிற கருத்துக்கு இது வலுச் சேர்ப்பதாக இருக்கிறது. அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று சொல்வதுதான் சரியான கருத்து. குப்பை அள்ளுபவர்களின் பிள்ளைகள்தான் குப்பையை அள்ள வேண்டுமா?" எனப் பேசினார்.

இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இது விவாதமான நிலையில், தூய்மைப் பணியாளர்களுடன் போராட்டக் களத்தில் நின்ற வழக்கறிஞர் மோகனைத் தொடர்புகொண்டு பேசினோம். திருமாவளவனின் கருத்து அரசியல் சார்பு கருத்து எனத் தன் பேச்சைத் தொடங்கியவர் பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தார்.

``பணி நிரந்தரம் செய்யப்படாத தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை செழிப்பாகிவிட்டதா? தனியார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி செய்பவர்களின் குடும்பத்தைவிட, பணி நிரந்தரம் செய்தவர்களின் குழந்தைகள் படித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தூய்மைப் பணிக்கு வருவதில்லை.

வழக்கறிஞர் மோகன்
வழக்கறிஞர் மோகன்

பணி நிரந்தரம் செய்யப்பட்டவருக்கு வேலையின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மாற்று வேலைகளைக் கூட அரசால் வழங்க முடியும். பணிப் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் தனியாரிடம் அப்படி எதுவும் சாத்தியமில்லை.

ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வேலை செய்தவர், ஒப்பந்தம் முடிந்த பிறகு வேறு நிறுவனத்திடம் வேலை கேட்டுச் சென்றாலும் தூய்மைப் பணியாளராகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.

தேர்தல் அறிக்கையின் 284 வாக்குறுதியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், பதவி உயர்வு வழங்கி அவர்களை அந்தப் பணியிலிருந்து விடுவிக்கிறோம் என்றது தி.மு.க. கடந்த 4 ஆண்டுகளில் அப்படி எத்தனை பேரை விடுவித்திருக்கிறது?

தூய்மைப் பணியிலிருந்து இவர்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறதா? தனியாருக்கு இருக்கிறதா? தூய்மைப் பணியாளர்களை அந்தப் பணியிலிருந்து விடுவிக்க இந்த அரசு என்ன செய்திருக்கிறது?

திருமாவளவனின் கருத்து அரசியல் சார்புடையது

30,000 வீடுகள் தருவதாக இப்போது அறிவித்திருக்கிறார்கள் என்றால், அந்த வீடுகள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற இடங்களில் தருவார்கள். ஏனென்றால் இப்போது அந்தப் பகுதிகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

தூய்மைப் பணியாளர்களை இந்த வேலையிலிருந்து நீக்குவதுதான் அரசின் நோக்கம் என்றால், காலை உணவு, மகப்பேறு விடுமுறை, பிஎஃப் இதெல்லாம் எதற்கு? நூறுநாள் வேலைதிட்டம் போல, வேலை இல்லாதவர்களை வேலைக்கு அழைத்துச் செல்லுங்கள். அதில் எல்லா சமூக மக்களும் வேலைக்கு வருவார்களே...

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

திருமாவளவனின் கருத்து தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கையைப் பலவீனப்படுத்துகிறது.

ஒருவேளை தூய்மைப் பணியாளர்கள் இனி இந்த வேலையைச் செய்யமாட்டோம் என அறிவித்தால் அவர்களுக்கு மாற்றுத் தொழில் என்ன? அதற்கான திட்டம் அரசிடம் என்ன இருக்கிறது? இதற்கு திருமாவளவனிடமோ, திராவிட மாடல் அரசிடமோ பதில் இருந்தால் சொல்லட்டும்.

தூய்மைப் பணியாளர்கள் குறித்து இவ்வளவு நாள்களாக திருமாவளவன் ஏன் பேசவில்லை. தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்குப் பிறகுதான் இதைப் பேச வேண்டுமா?

சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளாக ஒரே சமூகம்தான் குப்பைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது என்றால் அரசு இந்தச் சிக்கலைப் பொருட்படுத்தவே இல்லை என்பதைத்தானே புரிந்துகொள்ள முடிகிறது.

2006 - 2011 ஆட்சிக் காலத்தில் மதுரையில் தூய்மைப் பணிக்கு ஆட்களை எடுக்கும்போது எஸ்.சி, எஸ்.சி மட்டும் என அறிவித்தார்கள். அரசுக்கே சாதி மனநிலை இருக்கிறது. எனவே திருமாவளவனின் கருத்து அரசியல் சார்புடையது. இயக்க மறுப்பியல் பார்வை" எனத் தீர்க்கமாகப் பேசினார்.

சிபிஎம் தோழர் செல்வா
சிபிஎம் தோழர் செல்வா

திருமாவளவனின் கருத்தை எப்படிப் புரிந்துகொள்வது? என்றக் கேள்விக்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, ``சென்னையில் பணி நிரந்தரமானவர்கள் ரூ. 35,000 - ரூ. 38,000 வரை ஊதியம் வாங்குகிறார்கள். தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு ரூ.16,000 வழங்கப்படுகிறது. கிட்டதட்ட ரூ.20.000 குறைகிறது.

இதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு உறுதுணையாக அரசு தனியார்மயப் படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது? எனவே பணிப்பாதுகாப்புக்கும், சரியான ஊதியத்துக்கும் பணி நிரந்தரம் அவசியம்.

எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சண்முகம் 'திருமாவளவனின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல' என்பதைத்தான் சுட்டிக்காண்பித்திருக்கிறார்.

அதேநேரம், தூய்மைப் பணியாளர்கள் கடைசிவரை அந்தப் பணியை மட்டுமே செய்ய வேண்டுமா என்றக் கேள்வி எழும்போது, திருமாவளவனின் கருத்து விவாதத்துக்குள் வருகிறது.

ஒருவர் தூய்மைப் பணியாளராகப் பணியைத் தொடங்குகிறார் என்றால், சில வருட பணிகளுக்குப் பிறகு அவருக்கு அடுத்தக்கட்ட பூங்கா பராமரிப்பு போன்ற பணிமாறுதல்களை அரசு வழங்க வேண்டும்.

Sanitary Engineering Department வேண்டும்

நம் நாட்டில் தூய்மைப் பணிக்கான இஞ்சினியரிங் துறை மற்றும் துப்புறவு குறித்தும், இதை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பதற்கான கல்வியோ நம் நாட்டில் இல்லை.

CPM பெ.சண்முகம்
CPM பெ.சண்முகம்

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில்கூட மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நம் நாட்டில் அப்படியல்ல.

Sanitary Engineering Department இங்குக் கொண்டுவரவேண்டும். நாம் தூய்மைப் பணிக்கான திட்டங்களில் இன்னும் வளரவே இல்லை. இது குறித்தெல்லாம் நாம் கேள்வி எழுப்பவேண்டிய அவசியம் இருக்கிறது.

தூய்மைப் பணி, மருத்துவமனை, பள்ளிகள் போன்றவற்றில் பணி செய்யும் முதல் தலைமுறை அடிப்படை நிலை ஊழியர்களின் (D Class Employee) அடுத்த தலைமுறை, முன்னேறியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்

இந்த நிலையில்தான், இதுபோன்ற பணிகளை முழுக்க முழுக்க தனியார்மயமாக்குவது என்ற அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பணிகள் தனியார்மயப்படுத்தினால், ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பு சுரண்டப்படும். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்.

அதனால்தான் இந்தப் பணிகளை அரசுப் பணியாக்க வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.

எனவே அடிப்படை நிலை ஊழியர்களை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

பணி நிரந்தரம் செய்யவில்லை என்றலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லும் சூழலில்தான் வாழ்கிறார்கள். எனவே அவர்களுக்கு என்ன பாதுகாப்பு வழங்கப் போகிறோம்?

இதன் அடிப்படையில்தான், குறிப்பிட்ட சமூகம் ஒரு வேலையில் ஈடுபடுத்தப்படுவதை எப்படி தடுப்பது...

அதற்கான அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூகம், பண்பாடு ரீதியில் என்ன முயற்சிகளைச் செய்ய வேண்டும் என விவாததிக்கப்பட வேண்டும்.

இதெல்லாம் இல்லாமல், வெறுமனே பணி நிரந்தரம் கூடாது எனக் கூறுவது தனியார்மயத்துக்கு உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்த மட்டுமே வழிவகுக்கும்" என விவாதத்துக்கு அடித்தளமிட்டார்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை...

இந்தக் கருத்துக்களை முன்வைத்தும், திருமாவளவனின் பேச்சுக்கான காரணத்தையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசிடம் முன்வைத்தோம்.

அவர், ``பணி நிரந்தரம் என்றக் கோரிக்கை நியாயமானது. சென்னை மாநகராட்சியில் 5, 6 வது மண்டலங்களில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் மட்டும்தான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

இந்த இரண்டு மண்டலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதில் வி.சி.க-வுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

சென்னை குப்பை
சென்னை குப்பை

விகடன் மூலம் அரசுக்கு கோரிக்கை

அதே நேரம் இந்தக் கோரிக்கையில் எங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறது. இந்தத் தூய்மைப் பணியைச் செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்துகள்.

காலம் காலமாக இந்தப் பணியில் தலித்துகள்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கி அப்படியே அவர்களைத் தொடரச் செய்வது எப்படிச் சரியான நடைமுறையாகும்?

இந்தப் பணியைச் செய்பவர்கள், அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டுச் செல்வதில்லை என்கிறார்கள். சரி...

அப்படியானால், கடந்த 75 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்பவர்கள் யார் என்பது குறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். விகடன் மூலம் அரசுக்கு நாங்கள் கோரிக்கையே வைக்கிறோம்.

எந்தத் துறையையும் தனியார்மயப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் வெட்டியான் வேலையை அரசு பணியாக்குவது சரியா?

பணி நிரந்தரம் கேட்பவர்கள் எல்லா சமூக மக்களையும் இதில் பங்கெடுக்கச் செய்யுங்கள். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இந்த நிலையை நிரந்தரப்படுத்த கேட்பது என்ன மாதிரியான மனநிலை?

விசிக - வன்னி அரசு
விசிக - வன்னி அரசு

சனாதானக் கோட்பாட்டின் அடிப்படையில்தான்

விவசாயம், நூற்பாலை தொடங்கி எல்லா தொழிற்சாலைக்கும் இயந்திரம் வந்துவிட்டது. ஆனால் தூய்மைப் பணிக்கு மட்டும் எந்த இயந்திரமும் கொண்டுவரவில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு பெரும் கோட்பாடே இருக்கிறது.

பிரதமர் மோடி கர்ம யோகி என்ற அவரின் புத்தகத்தில் 'தூய்மைப் பணி என்பது வாழ்வாதாரத்துக்கான பணி என நான் கருதவில்லை. கடவுளுக்காகவும், இந்தச் சமூகத்துக்காகவும் உழைப்பதுதான் நம் கடமை என்பதை உணர்ந்ததால் தூய்மைப் பணியாளர்கள் தலைமுறை தலைமுறையாக அதே பணியைத் தொடர்கிறார்கள்' என எழுதியிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்த சனாதானக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்தப் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

வேதனையாக இருக்கிறது

பொருளாதார அடிப்படையில் பணி நிரந்தரம் கேட்கிறார்கள். நாங்கள் சமூக நீதி அடிப்படையில் அதை வேண்டாம் என்கிறோம். தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு நடிகை கஸ்தூரி, பாடகி சின்மயி போன்றவர்கள் தானாக வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பணி நல்ல பணி என்றால் அவர்கள் வந்து இந்தப் பணியைச் செய்யட்டுமே. ஆணவப் படுகொலை விவகாரத்திலும் அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் முன்னெடுத்தோம்.

அந்தப் போராட்டத்துக்கு ஏன் அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த இரண்டு நடவடிக்கைக்கும் காரணம் சனாதானக் கோட்பாடுதான். இதை எதிர்த்துதான் நாங்கள் களமாடிக்கொண்டிருக்கிறோம்.

விசிக - வன்னி அரசு திருமாவளவன்
விசிக - வன்னி அரசு திருமாவளவன்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இந்தக் கொடுமைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தத் தூய்மைப் பணிக்கு இயந்திரங்களைக் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த இந்தியாவிலேயே முதல் தலைவர் திருமாவளவன்.

தொடர்ந்து அதுகுறித்து பேசியிருக்கிறார். தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக இயந்திரங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கருத்தரங்கங்களை, போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்திருக்கிறோம். குறிப்பிட்ட சமூகத்து மட்டும் இந்த வேலையைத் திணிக்காதீர்கள் என்பதே எங்களின் அடிப்படை கோரிக்கை.

EWS இட ஒதுக்கீடு பெறும் ஏழைகளுக்கும் இந்த வேலையைச் செய்வதற்கான சூழலை ஏற்படுத்துங்கள் என்றே கேட்கிறோம். ஆனால், சனாதானப் பார்வைக்கு ஆதரவு எழுந்திருப்பது வேதனையாக இருக்கிறது" என்றார்.

இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்ற கேள்வியுடன் துப்புரவுப் பணியாளர்கள் நிலை குறித்து தொடர்ந்து எழுதி வரும் ஊடகவியலாளர், எழுத்தாளர் ஜெயராணியிடம் பேசினோம்.

’’ஏற்கனவே பத்து மண்டலங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்ட நிலையில் பணி நிரந்தரம் என்பது இரண்டு மண்டலங்களுக்கு மட்டும் சாத்தியமில்லை. இது குறுகியப் பார்வையுடன் இந்தப் பிரச்னையை அணுகுவதாகும்.

அதே போல, ’தனியார் வசம் போனாலும் இதே சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்’ என்ற போராடும் மக்களின் கோரிக்கையும் ஒரு தற்காலிகத் தீர்வாகவே அமையும். இந்தப் பணியில் உள்ள ஆபத்துகளையும் இழிவுகளையும் கருத்தில் கொண்டு அதை நிவர்த்தி செய்யும் வரை அரசுப் பணியாகவே வைத்திருக்க வேண்டும்.

எழுத்தாளர் ஜெயராணி
எழுத்தாளர் ஜெயராணி

ஆனால் அரசுப் பணியாக இருந்த போதும் ஊதியம் பலனைத் தாண்டி உரிமையோ பாதுகாப்போ கண்ணியமோ கிடைக்கவில்லை என்பதுதான் கொடுமையான உண்மை.

துப்புரவுப் பணி, தூய்மைப்பணி என அழகழகாக நாம் அழைத்தாலும் அடிப்படையில் இது கையால் மலமள்ளும் இழிவுதான். உலகளவில் தூய்மை பணி என்பது ஓர் ஆபத்தான வேலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அப்படி கருதுவதில்லை என்றாலும் இங்கேதான் தூய்மைப் பணியாளர்கள் கடுமையான நோய்களுக்கு உயிரிழப்புகளையும் எதிர்கொள்கிறார்கள். காரணம் இங்கே அது மனிதக் கைகளால் செய்ய வேண்டிய அவலமாக நீடிக்கிறது.

எவ்வளவோ போராட்டங்கள் நடந்தேறிவிட்டன. ஆனால் இன்றும் துப்புரவுப் பணியாளர்கள் எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தானக் கழிவுகளை வெறும் கைகளால்தான் அப்புறப்படுத்துகின்றனர்.

சாக்கடையைச் சுத்தம் செய்வது, மலக்குழிக்குள் அடைப்பெடுப்பது, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவது, செத்த விலங்குகளை அகற்றுவது என இந்த எல்லா வேலையையும் இவர்கள் வெறும் கைகளாலேயே செய்கின்றனர்.

இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வகையான பாதிப்புகளுக்கு இப்பணியாளர்கள் ஆளாகின்றனர். இவர்களின் ஆயுட்காலம் குறைகிறது. அதிகளவில் இளவயது மரணங்கள் நிகழ்கின்றன.

மலக்குழி மரணங்கள்
மலக்குழி மரணங்கள்

அடிப்படையிலேயே சாதிய அடிமைத் தொழிலாக இருக்கும் இந்தப் பணியைக் கண்ணியமான தொழிலாக மாற்றுவதற்கான ஒரே ஒரு முயற்சியைக் கூட மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை.

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் தடைச் சட்டத்தின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. மலக்குழிக்குள் இறங்குவோர் மட்டுமே மனிதக்கழிவை அகற்றுவோர் என அரசு நினைக்கிறது.

இந்நாட்டின் கேவலமான குப்பை மேலாண்மையும் பாதுகாப்பு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படாத அவலமும் அம்பலப்படுத்தும் உண்மை என்னவென்றால், சுமார் ஐம்பது லட்சம் துப்புரவுப் பணியாளர்களுமே மனிதக் கழிவகற்றுவோர் தான்.

குறிப்பிட்ட சாதியினரே இந்த இழிதொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதில் இங்கே யாருக்கும் எந்தச் சுரணையும் இல்லை.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அறிவித்தது. ஆனால் மலக்குழியில் மனிதர்கள் இறங்குவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.

மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்காமல் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தான் என்ன? அதே போல மறுவாழ்வு என்ற பெயரில் இங்கே நடப்பதெல்லாம் இழிவுக்குள்ளேயே இருக்க வைக்கும் வன்கொடுமைதான்.

தூய்மைப் பணியாளர்கள் - சென்னை மாநகராட்சி
தூய்மைப் பணியாளர்கள் - சென்னை மாநகராட்சி

குப்பை அள்ளுவோருக்கு குப்பை வண்டியையே தொழில் வாய்ப்பாகத் தருவது எப்படி அவர்களுக்கான மறுவாழ்வு ஆகும்? உண்மையிலேயே இதை எல்லாம் யோசிக்கிற அதிகாரிகளோ அறிஞர்களோ திராவிட மாடல் அரசில் இல்லையா?

அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி என்று முதல்வர் ஸ்டாலின் அறிவியல் குறித்து பரப்புரை செய்கிறார். ஆனால் துப்புரவுப் பணியை இயந்திரமயப்படுத்தி அறிவியல் வழியில் செயல்பட எது தடுக்கிறது?

துப்புரவுப் பணியை எந்திரப்படுத்தாமல், அவர்களின் கண்ணியத்தையும் மாண்புரிமையையும் மீட்டெடுக்காமலேயே அதை தனியார் வசம் ஒப்படைத்தது ஒரு தான்தோன்றித்தனமான செயல். இயந்திரமயமே இப்பணியைக் கண்ணியமானதாக மாற்றும்.

அதன் வழியேதான் ஒரு சாதிக்கான தொழில் என்ற இழிவு ஒழிக்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டுமென என்று போராடுகிறார்கள். அனைத்து சாதியினரும் தூய்மைப் பணியாளர் ஆவதும் சமூக நீதி தானே? உங்கள் சமூக நீதி சாதியற்றதா?

வார விடுமுறை, பண்டிகை நாட்கள், மழை, வெயில், நல்லது, கெட்டது என எதற்குமே விடுப்பில்லாமல் 365 நாட்களும் வேலை செய்யும் பணியாளர்கள், அதே ஊதியம் என்ற குறைந்தபட்சக் கோரிக்கையோடு 13 நாட்கள் ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் அவர்களை குப்பையைப் போல கசக்கியெறிந்து நலத்திட்டங்கள் என்ற பெயரில் இந்தச் சாதி ஆதிக்கம் நிறைந்த அரசுத் துறையில் சாத்தியமே படாத பொறிகடலைச் சலுகைகளை அறிவித்து அவமானப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

CPI விழாவில் ஸ்டாலின்
CPI - ஸ்டாலின்

கலைஞர் கனவு இல்லம், சுயதொழில், செத்தால் பத்து லட்சம் இவையெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்பதோடு இந்த மக்களை இந்த இழிவிற்குள்ளேயே வைத்திருப்பதற்கான ஏற்பாடுதான்.

தூய்மைப் பணியை இயந்திரமயப்படுத்த வேண்டும் என்பதும் அதன் வழியே எல்லோரும் பங்கெடுக்கும் கண்ணியமானத் தொழிலாக அதை மாற்ற வேண்டுமென்பதும் நீண்ட நாள் கோரிக்கை.

சமூகப் பொறுப்புள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளின் வழியே அப்பணியில் ஈடுபடும் பட்டியல் சமூக மக்கள் அந்த இழிவிலிருந்து மீட்கப்பட வேண்டுமென்ற உன்னதமான வரலாற்றுக் கோரிக்கையை, அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதற்கான அல்லது அரசின் அராஜகமான முடித்து வைத்தலை நியாயப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவது அநியாயம்.

எழுத்தாளர் ஜெயராணி

சாட்டிலைட்டுகளையும் ஜிசாட்டுகளையும் ஏவும் நாட்டில் இன்னும் தூய்மைப் பணியாளர்கள் கையால் மலமள்ளுவதை நாம் வெட்கமே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெ... மேலும் பார்க்க

குஜராத் அவலம்: "எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்" - பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ``ரூ.56 கோடி வீணானது; இந்த முறையாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா?'' - தவிக்கும் மக்கள்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ... மேலும் பார்க்க

``டி.ஆர்.பாலு பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கியவர்!'' - TRB-ன் மனைவி இறப்புக்கு ஸ்டாலின் இரங்கல்

நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு இன்று காலை காலமானார். டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாட... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கியை 2 வாரங்களுக்குள் சந்தித்த ட்ரம்ப்; பேச்சு வார்த்தையில் நடந்த மாற்றங்கள் என்ன?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. 2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்றரை ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கி... மேலும் பார்க்க

அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள்: `விளக்கம், ஆவணங்கள் இருந்தால்.!’ - தேதி குறித்த ராமதாஸ்

கடந்த டிசம்பர் மாதம் முதல், பா.ம.க-வில் அன்புமணி, ராமதாஸ் இடையில் முட்டல், மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த மே 30-ம் தேதியோடு, பா.ம.க தலைவர், பொதுசெயலாளர் உள்ளிட்ட பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப... மேலும் பார்க்க