திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!
திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததில் நிலை தடுமாறி பேருந்தின் முன்பக்கத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் காவல்துறையினர் விசாரணை செய்ததில் , விபத்தில் உயிரிழந்த நபர் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த பல்லாக்கு என்கின்ற ஜெயபிரகாஷ் என்பது தெரிய வந்துள்ளது. இவர் தேசிய நெடுஞ்சாலையில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மொபைல், செயின் பறிப்பது மற்றும் கஞ்சா விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.

ஏற்கனவே ஜெயபிரகாஷ் மீது ஒரு கொலை வழக்கும்,10 க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகளும் உள்ளது. இதற்காக வண்டியிலேயே பட்டா கத்தி ஒன்றையும் வைத்து கொண்டு சுற்றியிருக்கிறார். தற்போது ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் திருட்டு வாகனம் தான் என்பதையும் காவல்துறையினர் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.