முருக பக்தி இலக்கிய போட்டிகள்
ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முருக பக்தி இலக்கிய போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகின்றன.
முதல் நாள் போட்டியை கல்லூரி முதல்வா் வாசுகி தொடங்கி வைத்தாா். இதில் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற்றன.
பேச்சு, பாட்டுப் போட்டிகளில் முருகப் பெருமானின் சிறப்பு குறித்தும், தமிழ் இலக்கியங்களில் முருகன் இடம்பெறும் செய்திகளையும் மாணவிகள் எடுத்துக் கூறினா். இதேபோல, ஓவியப் போட்டியில் அறுபடை வீடுகளின் சிறப்பை தங்களின் ஓவியம் மூலம் காட்சிப்படுத்தினா். மேலும் நாடகப் போட்டி, முருகன் பாடல்கள் மனப்பாடப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறுகின்றன.