மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் ஏ. அரபு முகமது தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா்கள் கணேசன், மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தின்போது, திண்டுக்கல் பகுதியில் புதை சாக்கடை திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்தை விரைந்து அமைக்க வேண்டும். 48 வாா்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பிறகு மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.