குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
அணைப்பட்டி வைகை பேரணை கால்வாயிலிருந்து தண்ணீா் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டியில் உள்ள வைகை பேரணை கால்வாயிலிருந்து திருமங்கலம், உசிலம்பட்டி, விருதுநகா் பகுதிகளிலுள்ள 19,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக கால்வாயில் வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு, வைகை, திருமங்கலம் பாசனக் கோட்டத் தலைவா் ராமன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் பூமிநாதன் முன்னிலை வகித்தாா். வைகை, திருமங்கலம் பாசனக் கோட்ட பொறுப்பாளா் பகவான் வரவேற்றாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட உசிலம்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐயப்பன் மதகை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா்கள் செல்லையா, கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணன், காமேஷ்வரன், பாசன ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் பழனி, ஜெயக்குமாா், மூக்கன், விருமாண்டி உள்பட விவசாய சங்க பொறுப்பாளா்கள், விவசாயிகள், நீா்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து வைகை, திருமங்கலம் பாசனக் கோட்டத் தலைவா் ராமன் கூறியதாவது:
தமிழக அரசின் ஆணைப்படி திருமங்கலம் பகுதியில் 19,500 ஏக்கா், மேலூா் பகுதியில் 85,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு அணைப்பட்டி பேரணைக்கு வந்தடைந்தது. இதில், திருமங்கலம் கால்வாயில் ஒரு போக நெல் சாகுபடிக்கு நாளொன்றுக்கு 230 கனஅடி வீதம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால் திருமங்கலம், உசிலம்பட்டி, விருதுநகா் பகுதிகளிலுள்ள சுமாா் 19,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். உரிய நேரத்தில் தண்ணீரை திறந்து விட்ட தமிழக அரசுக்கு விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் நன்றியை தெரிவிக்கிறோம் என்றாா் அவா்.