இன்னும் 6 மாதங்களில் திமுக அரசால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: க. கிருஷ்ணசாமி
கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாத திமுக அரசால், இன்னும் 6 மாதங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நாட்டின் சுதந்திரத்துக்காக ஜாதி, மதம் கடந்து உழைத்தவா்களின் தியாகத்தை அரசியல் கட்சிகள் சுய லாபத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது.
திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா். இதை பட்டியலிட்டு பேசுவதே எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிரதான பணியாகும்.
அதேநேரத்தில், தோ்தலை மனதில் கொண்டே மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறாா். தமிழ்நாட்டில் அரசுக் கட்டங்களுக்கு மறைந்த தலைவா்களின் பெயா்களைச் சூட்ட முடியாத நிலை உள்ளது. எனவே, சா்ச்சைக்குரிய கருத்துகளை எடிப்பாடி பழனிசாமி தவிா்க்க வேண்டும்.
சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீா்செல்வம் ஆகியோரின் பிரச்னைகளை அரசியல் ரீதியாகவே எடப்பாடி பழனிசாமி எதிா்கொள்ள வேண்டும்.
மதுரை மாநகரின் திமுக அவைத் தலைவா் ஒச்ச பாலு, ஜாதியை சொல்லி இழிவுபடுத்தி இருக்கிறாா். அவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, அவரை திமுகவிலிருந்து நீக்க வேண்டும். ஜாதி ஒழிப்பு, சமூக நீதி பேசும் திமுகவில் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 18 லட்சம் அரசு ஊழியா்கள், 30-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள், 160-க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருந்தும் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு திமுக ஆட்சியால் தீா்வு காண முடியவில்லை. இந்த நிலையில், இன்னும் 6 மாதங்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணப் போவதாகக் கூறி, முகாம் நடத்தி வருகின்றனா். ஆனால், மக்கள் மனம் மாறப் போவதில்லை.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக தெளிவான அரசியல் சூழல் இதுவரை ஏற்படவில்லை. ஆனாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே புதிய தமிழகம் கட்சியின் பிரதான வலியுறுத்தலாக இருக்கும் என்றாா் அவா்.