கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய ஜவுளி பூங்காக்கள் தொடக்கம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்
கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும் என்றாா் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கைத்தறித்துறை சாா்பில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க கட்டட வளாகத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்ட மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரத்தையும் மற்றும் ஜவுளித்துறையின் சாா்பில் கோடங்கிப்பட்டியில் ரூ. 11.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜவுளிப் பூங்காவையும் வியாழக்கிழமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தறித் துறை சாா்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கரூா் வேலுச்சாமிபுரம் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க கட்டட வளாகத்தில் செயல்படும் கே.ஆா் (எச்) 2 தியாகி குமரன் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரம் மூலம் கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை கொண்டு, மெல்லிய மெத்தைகள் தயாா் செய்து கோ-ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் சங்க உறுப்பினா்களுக்கு தொடா்ந்து வேலைவாய்ப்பு வழங்கவும், சங்கம் அதிக லாபத்தில் செயல்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் ஜவுளித்தொழில் மேம்பாட்டுக்காக மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும், சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், கரூா் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் அமைக்கப்பட்ட ‘ஓயாசிஸ் டெக்ஸ்பாா்க் பிரைவேட் லிட் பூங்காவானது மாநில அரசு மானியம் ரூ. 2.50 கோடியுடன், மொத்தம் ரூ.11.87 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் ‘ஓயாசிஸ் ஹோம்டெக்ஸ் பிரைவேட் லிட்‘, ‘நியூலைன் பிரிண்டா்ஸ்‘ மற்றும் ‘கண்டியாா் இம்பெக்ஸ்‘ ஆகிய 3 ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் 9 பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கப்பட்டதில் இதுவரை 2 பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 7 பூங்காக்களின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து விரைவில் தொடங்கப்பட உள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சிகளில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கைத்தறி மற்றும் கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்துறை அரசுச் செயலா் வி.அமுதவல்லி, துணிநூல் துறை இயக்குநா் லலிதா ராஜேந்திரன், கைத்தறித்துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா் , சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம்(குளித்தலை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.