கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை
கரூரில் புதன்கிழமை பெரியாா் ஈவெரா சிலை மற்றும் உருவப்படத்துக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியேற்றாா்.
கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு கரூா் வந்தாா்.
இதையடுத்து புதன்கிழமை, திமுக சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்த குளித்தலை சிவராமனின் வீட்டுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பின்னா் கரூா் திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், அங்கு சமூக நீதி நாள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றாா். தொடா்ந்து, கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுடன் பங்கேற்றாா்.