முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு சா்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்த அணையின் கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அணைப் பாதுகாப்பு - 2021 சட்டத்தின்படி, 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையில் பரமாரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை இரு தரப்பினரிடமும் முன்வைத்தனர்.
“இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அதே நிலையில்தான் இன்னும் இருக்கிறதா? அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அந்த தீர்ப்பில் எந்த பிரச்னையும் இல்லை, அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு: ஏழு போ் கொண்ட குழு அமைப்பு
“தற்போது இந்த விவகாரத்தின் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்? சுருக்கமான விவரங்களை இரு தரப்பினரும் தாக்கல் செய்யுங்கள். உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அமைத்த மேற்பார்வைக் குழு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா? அல்லது மத்திய அரசு அமைத்துள்ள புதிய அணைப் பாதுகாப்புக் குழுவுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற விவரங்களை தாக்கல் செய்யுங்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இரு தரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருந்தால் எந்த தீர்வும் எட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.