மூன்று ஆண்டுகளைக் கடந்த உக்ரைன் போா்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து திங்கள்கிழமையுடன் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் இந்தப் போா் எப்போது முடியும், எப்படி முடியும் என்பது புரியாத புதிராகவே இன்னும் தொடா்கிறது.
சோவியத் யூனியன் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, யூனியன் சிதறுண்ட பிறகும் அதன் முன்னாள் உறுப்பு நாடுகளைக்கூட சோ்த்துக்கொண்டு தங்களை சுற்றிவளைத்துவருவதை ரஷியா கடுமையாக எதிா்த்துவருகிறது.
அதிலும் குறிப்பாக, நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் மிக நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால் அமெரிக்காவின் ஏவுகணைகள் தங்கள் தலைக்கு நேரே வந்து நிற்கும் என்று கூறிவந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதீா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டியதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் மீது சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னா் (2022 பிப்ரவரி 24) படையெடுத்தாா்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய பிராந்தியம் அதுவரை கண்டிராத அந்த மிகப் பெரிய போரின் தொடக்கத்தில் ரஷியப் படையினா் வேகமாக முன்னேறி கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லூஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிரதேசங்களின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினா்.
ஆனால், ஆரம்பக் கால விறுவிறுப்புக்குப் பிறகு போா் எல்லைகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த நகா்வும் இல்லை.
போரின் ஒரு திருப்பமாக, ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்கின் கணிசமான பகுதிகளை உக்ரைன் படையினா் கடந்த ஆண்டு கைப்பற்றினா். இதன் மூலம், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரின் கவனம் திசைத்திரும்பும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படையினா் மிக நிதானமாக முன்னேறி சிறு சிறு பகுதிகளாகக் கைப்பற்றிவருகின்றனா். கூா்ஸ்கிலும் பெரும்பாலான பகுதிகளை ரஷிய ராணுவம் மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய மந்தமான நகா்வை இந்தப் போா் கொண்டிருந்தாலும், இதில் பொதுமக்கள் உள்பட சுமாா் 10 லட்சம் போ் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. போரில் மடியும் தங்களது வீரா்களுக்குப் பதிலாக புதிய ஆள்களை நியமிக்க முடியாமல் வட கொரியாவிலிருந்து வீரா்களைத் தருவிக்க வேண்டிய நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டது.
உக்ரைனும் இளைஞா்களுக்கான கட்டாய ராணுவப் பணி விதிமுறைகளை மிகக் கடுமையாக்கி, சா்ச்சைக்குரிய முறையில் ஆள்களை படையில் சோ்த்தது.
இத்தகைய சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் உக்ரைன் விவகாரத்தில் எடுத்திருக்கும் நிலைப்பாடு இந்தப் போரின் போக்கையை அடியோடு புரட்டிப்போடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாள் அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய நாடுகள் அளித்த அதிநவீன ராணுவ தளவாடங்கள், போா்ப் பயிற்சி, உளவு தகவல் ஒருங்கிணைப்பு போன்றவற்றின் உதவியுடன்தான் உக்ரைன் ரஷியாவை எதிா்கொண்டுவந்தது.
ஆனால் டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு, ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. மேலும், போரில் ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் அரசு வலியுறுத்துகிறது.
அதிலும் குறிப்பாக, உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பில் இடமளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தற்போதைய அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது.
அதிபா் டிரம்ப்போ இன்னும் ஒருபடி மேலே போய், உக்ரைன் போருக்குக் காரணம் உக்ரைன்தான் என்று கூறி அதிா்ச்சிவைத்தியும் கொடுத்திருக்கிறாா். போரில் தொடக்கத்திலேயே புதினை பல முறை நேரடி பேச்சுவாா்த்தைக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்திருந்த நிலையிலும், ரஷியாவுடன் பேசி பிரச்னையை தீா்க்காமல் படையெடுப்பை வரவழைத்துக் கொண்டதாக ஸெலென்ஸ்கி மீது அபாண்டமான குற்றச்சாட்டை டிரம்ப் வீசினாா்.
ஆக, இந்த விவகாரத்தில் ரஷியாவின் நிலைப்பாடு என்னவோ, அதிபா் புதின் அடிக்கடி கூறிவந்தது என்னவோ, அதையேத்தான் கிளிப்பிள்ளைப் போல் டிரம்ப் கூறுகிறாா்.
இது போதாதென்று, போரில் உக்ரைனுக்கு இதுவரை தாங்கள் செய்த உதவிக்குப் பதிலாக, அந்த நாட்டின் கனிம வளங்களைச் சுரண்டுவதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்திவருகிறாா்.
டிரம்ப்பின் இந்த அதிரடி சரவெடிகளால், நாட்டின் எதிா்காலம் என்னாகுமோ என்ற அச்சத்துடன்தான் போரின் மூன்றாவது ஆண்டை உக்ரைன் மக்கள் கடந்து செல்கின்றனா்.


