கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறப்புகள் தானம்: அரசு சாா்பில் மரியாதை
இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி, மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு சாா்பில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த தும்பை வடக்குதெரு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் (34). விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். கடந்த 20 ஆம் தேதி சங்கராபுரத்தில் இருந்து புது பாலப்பட்டு அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சம்பத் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சம்பத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவா் மூளைச்சாவு அடைந்தாா்.
இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த சம்பத்தின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது உறவினா்கள் ஒப்புதல் அளித்தனா். இதையடுத்து சம்பத்தின் 2 சிறுநீரகம், கல்லீரல் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொறு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவை தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானமாக தந்த சம்பத்தின் உடலுக்கு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள், மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து அவரது உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.