மேகாலயத்தின் ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ ஆளுங்கட்சியில் ஐக்கியம்
வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தில் காங்கிரஸின் கடைசி சட்டப்பேரவை உறுப்பினரான (எம்எல்ஏ) ரோனி வி.லிங்டோ, ஆளும் தேசிய மக்கள் கட்சியில் (என்பிபி) புதன்கிழமை இணைந்தாா். இதன் மூலம், மேகாலய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மைலியம் தொகுதியின் எம்எல்ஏவான லிங்டோ, பேரவைத் தலைவா் தாமஸ் ஏ.சங்மாவிடம் தனது இணைப்பு கடிதத்தை சமா்ப்பித்தாா். அந்தக் கடிதத்தை ஆய்வு செய்த பேரவைத் தலைவா், லிங்டோவை என்பிபி எம்எல்ஏவாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்தாா். இந்நிகழ்வில் மாநில துணை முதல்வா் ஸ்னியாப்ஹலாங் தா் உள்ளிட்ட மூத்த என்பிபி தலைவா்கள் உடனிருந்தனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒருவரான சலெங் ஏ.சங்மா 2024 மக்களவைத் தோ்தலில் துரா தொகுதியில் வெற்றிப் பெற்று எம்.பி. ஆனாா். மீதமுள்ள நான்கு எம்எல்ஏக்களில், செலேஸ்டின் லிங்டோ, கேப்ரியல் வாஹ்லாங், சாா்லஸ் மா்ங்கா ஆகிய மூவா் கடந்த ஆண்டு அக்டோபரில் என்பிபியில் இணைந்தனா்.
தற்போது ரோனி வி.லிங்டோவும் என்பிபியில் இணைந்ததால், 60 உறுப்பினா்களைக் கொண்ட மேகாலய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏகூட இல்லை. அதேநேரம், சட்டப்பேரவையில் என்பிபியின் பலம் 32 எம்எல்ஏக்களாக அதிகரித்துள்ளது. இது, ஆளும் மேகாலய ஜனநாயகக் கூட்டணியில் (எம்டிஏ) என்பிபியின் நிலையை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த ஆளும் கூட்டணிக்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.