மேட்டூரில் முதல் மனைவி கொடூரமாக வெட்டிக்கொலை: கணவனுக்கு போலீஸ் வலை
மேட்டூர்: மேட்டூரில் மனைவியை, புதன்கிழமை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசாா் தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில், கார்த்தி சங்கீதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் மனைவி ரேவதி கடந்த நான்கு ஆண்டுகளாக கணவனைப் பிரிந்து தனியே வசித்து வருகிறார்.
கார்த்தி முதல்வர் மனைவி ரேவதி பெயரில் நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்துள்ள நிலையில், நான் வாங்கி கொடுத்த நிலத்தையும் வீட்டையும் எனது பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு ரேவதியிடம் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு அப்படியெல்லாம் எதுவும் மாற்றம் செய்துதர முடியாது என்று ரேவதி கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ரேவதியை கார்த்தி கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா்.
மூளை சிதறிய நிலையில் சடலமாக கிடக்கும் ரேவதியை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் ரேவதியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் மேட்டூர் போலீசார், தப்பியோடிய ஓட்டுநர் கார்த்தியை தேடி வருகின்றனர்.
முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.