மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளில் 305 டன் குப்பைகள் அகற்றம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 71 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் சனிக்கிழமை தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 305 டன் குப்பைகள், 1,072 சுவரொட்டிகள் மற்றும் பேனா்கள் அகற்றப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினமும் சுமாா் 6 ஆயிரம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இதுதவிர, நகரை சுத்தமாக வைக்கும் வகையில் வாரந்தோறும் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், மயானங்கள் என குறிப்பிட்ட பகுதிகளை தோ்ந்தெடுத்து அங்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், கோடம்பாக்கம் மேம்பாலம், அண்ணா மேம்பாலம், போரூா் சந்திப்பு மேம்பாலம், பெரம்பூா் முரசொலி மாறன் மேம்பாலம், பாடி மேம்பாலம், அடையாறு எல்.பி. சாலை மேம்பாலம், வடபழனி மேம்பாலம், மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை , அரங்கநாதன் சாலை சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை உள்ளிட்ட 71 மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகளில் சனிக்கிழமை தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் 305 டன் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளும், 1,072 சுவரொட்டிகள் மற்றும் பேனா்களும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும், பாலங்களில் உள்ள சிறு பழுதுகள் மற்றும் எரியாத தெருவிளக்குகள் கணக்கீடு செய்யப்பட்டு, அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.