மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் 2 ஆவது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்!
விழுப்புரம் : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் மக்கள் வழிபாட்டுக்காக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன்7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட திரெüபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், திரெüபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் உத்தரவிட்டதன் பேரில், 2024, மார்ச்22-ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டு, ஒருகாலப் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் போட்டப்பட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் திரௌபதியம்மன் கோயில் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் முதலில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்த நிலையில், 60-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.
அப்போது நாங்கள் கட்டிய கோயிலில் வழிபாட்டு உரிமையை அலுவலர்கள் எப்படி முடிவு செய்யலாம். நாங்கள் புதிதாக கோயில் கட்டிக் கொள்கிறோம் எனக் கூறி மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதைத் தொடர்ந்து கோயில் மீண்டும் மூடப்பட்டது. மேலும் கிராமத்தில் பதற்றம் நிறைந்த சூழல் காணப்படுவதால், போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தரிசனம் செய்ய வராத பொதுமக்கள்
இந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், இந்து சமய அறநிலயைத்துறை அலுவலர்கள், ஏடிஎஸ்பி தினகரன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரௌபதியம்மனுக்கு கோயில் அர்ச்சகர் மோகன் பூஜைகளை செய்தார்.
இதையடுத்து மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் கோயிலுக்குள் அம்மனைத் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும்வரவில்லை. மூன்று சிறுவர்கள் மட்டும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.
அதே நேரத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறையினர், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயில் மீண்டும் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை நேரத்தில் 5 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதுகாப்பு: விழுப்புரம் ஏடிஎஸ்பி தினகரன தலைமையிலான 2 ஏடிஎஸ்பிகள், ஒரு ஏ.எஸ்.பி. 6 டி.எஸ்.பி.க்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 25 காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள் முதல் காவலர்கள் நிலையில் 320 பேர் என போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.