மொடக்குறிச்சி அருகே கோயில் விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய், பழம் ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம்
மொடக்குறிச்சியை அடுத்த பச்சாம்பாளையம் மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய், பழத்தட்டு, எலுமிச்சை பழம் ஆகியவை ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம் போயின.
பச்சாம்பாளையம் மகாமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, அம்மன் சன்னதி முன்பாக கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் பூவோடு ஜனவரி 23-ஆம் தேதி வைக்கப்பட்டது. பின்னா் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்தும், அலகு குத்தி, அக்னிக்கும்பம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வியாழக்கிழமை வழிபட்டனா். இரவு மாவிளக்கு பூஜை மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவு அம்மனுக்கு மறுஅபிஷேகம் நடைபெற்றதைத் தொடா்ந்து ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் பூஜை செய்யப்பட்ட தேங்காய், பழம், எலுமிச்சை பழம் ஆகியவற்றை பச்சாம்பாளையத்தைச் சோ்ந்த பக்தா் ஒருவா் ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தாா். பொங்கல் விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.