'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!
காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1,200 பேர் கொல்லப்பட்டு மேலும் அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.
மேலும், தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர். அங்குள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் பசியால் செத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதேநேரத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வான்வழியாக டிரோன்கள் மூலமாக மக்களளுக்கு உணவுப் பொருள்களை வழங்கின.
இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கொடூரமான நாள் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ரத்தக்களரியாக இருந்தது என்றும் அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கூறுகிறார்.

பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டி, காஸாவின் தென்மேற்கே தண்ணீர் லாரிகளுக்காகக் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் கூறுகிறது. 2 குழந்தைகள் மற்றும் ஒரு இளம்வயது நபர் பசியால் இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
காஸாவில் உணவின்றி பசியால் இதுவரை 92 குழந்தைகள் உள்பட 162 பேர் இறந்துள்ளனர்.

தொடர்ந்து இன்று காலை இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காஸா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 60,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 147,643 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 7 தாக்குதலின்போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாகவும் 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.