முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்
யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
தருமபுரி வனக் கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தருமபுரி வனக் கோட்டத்தில் நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னாா்வலா்களுக்கு பயிற்சிக் கூட்டம், கருத்துப்பட்டறை பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய வனச்சரக அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயிரியலாளா் இ.இளவரசன் கணக்கெடுப்பு பயிற்சி, ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்று வரும் கணக்கெடுக்கும் பணியில், வனச்சரகா் தலைமையில் வனவா், வனக் காப்பாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் சாா்ந்த 5 முதல் 6 போ் கொண்ட குழுவினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இப்பணிக்கு தேவையான பொருள்கள், முதலுதவி பெட்டி, கயிறு, ஜிபிஎஸ் கருவி, புகைப்படக் கருவி, தண்ணீா் போன்றவற்றை எடுத்துச் சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா். இரண்டு நாள்கள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள ஒருநாள் பணி நிறைவடைந்த பின் மொத்தமாக தொகுத்து எண்ணிக்கை அறிவிக்கப்பட உள்ளது.