Gill : 'கோலி, ரோஹித் கொடுத்த ப்ளூ ப்ரின்ட்; சவாலுக்கு தயார்!' - இந்திய அணியின் புதிய கேப்டன் கில்
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில், தன்னுடைய புதிய பொறுப்பு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிசிசிஐ வெளியிட்டிருக்கும் வீடியோவில் கில் பேசியிருப்பதாவது, ''ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தியாவின் கிரிக்கெட் ஆட தொடங்கும் எந்த சிறுவனும் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்றே விரும்புவான். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் ஆட வேண்டும் என்று விரும்புவான்.
அப்படியிருக்க இந்த கேப்டன் பதவியை ஒரு கௌரவமாகவும் பொறுப்பாகவும் பார்க்கிறேன். எல்லாருக்கு முன்னுதாரணமாக திகழக்கூடிய கேப்டனாக இருக்கவே விரும்புகிறேன். அது பெர்பார்மென்ஸ் சம்பந்தப்பட்டு மட்டும் அல்ல. களத்திற்கு வெளியேயுமே கூட ஒழுக்கத்தோடும் கடின உழைப்போடும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
ஒரு கேப்டனாக எந்த சமயத்தில் நம்முடைய கருத்தை எடுத்து வைக்க வேண்டும், எந்த சமயத்தில் வீரர்களுக்கு இடத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், ஒவ்வொரு இந்திய வீரரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைப் பின்னணியை கொண்டவர், வெவ்வேறு பின்னணியின் வளர்ந்தவர்கள். அதைப் புரிந்துகொண்டு வீரர்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிக்கொணர என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்.
கிரிக்கெட்டை தாண்டியும் அவர்களை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அதேமாதிரி, நான் பேட்டிங் ஆடுகையில் ஒரு கேப்டனாக யோசிக்கக்கூடாது, ஒரு பேட்டராகத்தான் யோசிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். நிறைய இந்திய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். சிலரோடு ஆடியிருக்கவும் செய்கிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் இரண்டு வெவ்வேறான ஸ்டைல்களை கொண்டவர்கள்.

ஆனால், இருவருமே வெற்றிமே மட்டுமே லட்சியம் என்கிற ஒரே இலக்கை நோக்கியே செயல்பட்டார்கள். அவர்களிடமிருந்து நிறையவே கற்றிருக்கிறேன். கோலி, ரோஹித், அஷ்வின் என மூவருமே வெளிநாடுகளில் எப்படி வெல்ல வேண்டும் என்கிற ப்ளூ ப்ரிண்ட்டை கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர். நாங்கள் எந்த சவாலுக்கும் தயார்.' என்றார்.