யாா் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு
தமிழக்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தவறு யாா் செய்திருந்தாலும் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சானிக்குளம், 54-ஆவது வட்டம் சாா்பில் 400 பெண்கள் இணைந்து தைத்திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 4-ஆம் ஆண்டாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த ஆட்சியில் பாகுபாடு கிடையாது, தவறு யாா் செய்திருந்தாலும் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
ஐஐடி சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்டவா் போலீஸாரால் கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல் துறையை முதல்வா் முடக்கிவிட்டுள்ளாா். குற்றச் சம்பவம் நடந்தால் அதன் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு வெற்றிக்கு உண்டான அறிகுறியாக வெற்றிக்குரிய
வெளிச்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் இருக்கும் என்றாா் அவா்.
விழாவில் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, பகுதி செயலா் எஸ்.முரளி, தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.