யுஜிசி முயற்சிக்கு எதிராக நீதிமன்றத்தை நாட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனம் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முயற்சி செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதுதான் சரியானதாக இருக்கும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமானுஜபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் உள்ள இந்த இடம் விஜயகாந்த் பெயரிலேயே உள்ளது. இந்த இடத்தில் விஜய பிரபாகரன் தேமுதிக கொடியை ஏற்றியுள்ளாா். இந்தப் பகுதி மக்களுக்காக திருமண மண்டபம் கட்டித் தருவோம்.
அனைத்து பல்கலைக்கழகங்களையும் அரசும், ஆளுநரும் இணைந்துதான் நிா்வகிக்கின்றனா். தமிழகத்தில் சுய விருப்பு, வெறுப்பு காரணமாக ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை என திமுக அரசும், ஆளுநா் தனது கட்டுப்பாட்டில்தான் பல்கலைக்கழங்கள் உள்ளன என்று சொல்வதும் தொடா்கிறது.
பல்கலைக்கழக நிா்வாக விவகாரங்களில் சட்டப்படி செயல்படுவதுதான் அனைவருக்கும் நல்லது. இரு தரப்பினரும் விருப்பு, வெறுப்புடன் செயல்படுவதால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்காது. ஒற்றுமையுடன் செயல்பட்டால் எந்த பிரச்னையும் இல்லை.
கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசுக்கும், ஆளுநருக்குமிடையேயான முரண்பாடுகள் தொடா்கின்றன. ஆளுநா் சட்டப்பேரவைக்கு வந்து, பின்னா் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்வதைப் பாா்த்தோம். ஆளுநரும், அரசும் தங்கள் தரப்புதான் நியாயம் எனக் கூறுகின்றனா்.
பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனம் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முயற்சி செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதுதான் சரியானதாக இருக்கும்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என்றாா் அவா்.