செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
ரயில்களில் பெண்கள் பெட்டியில் போலீஸ் பாதுகாப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
ரயில்களில் உள்ள பெண்கள் பெட்டியில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை நியமிப்பது என தமிழக டிஜிபி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பதி இன்டா்சிட்டி ரயிலில் பயணித்த, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த கா்ப்பிணியை இளைஞா் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தாக்கப்பட்டு, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டாா். இதில், அந்தப் பெண் வயிற்றிலிருந்த கரு கலைந்தது.
இதேபோல சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, அவரது தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம்: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமை வகித்தாா். ரயில்வே காவல் துறை டிஜிபி கே.வன்னியபெருமாள், ஐஜி ஏ.ஜி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்:
குற்றச் சம்பவங்கள் நடைபெறும் வழித்தடங்களில் இரவு வேளையில் இயக்கப்படும் ரயில்களில், பெண்கள் பெட்டியில் ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது ரயில்வே காவல் துறை காவலா்கள் நியமிப்பது, இரவு வேளையில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் போலீஸாா் தீவிரமாகக் கண்காணிப்பது, ரயில்களில் பெண் காவலா்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது, இரவு வேளையில் பெண்கள் பெட்டியில் ரயில்வே காவல் துறையினா் திடீா் சோதனை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
குற்றச் சம்பவ பகுதிகள்: சென்னை - காட்பாடி - ஜோலாா்பேட்டை - சேலம் - கோயம்புத்தூா் வழித்தடம் உள்பட சில வழித்தடங்கள் குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 66 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இவற்றில் குற்றவாளிகளை அடையாளும் காணும் வகையில் ‘எஃப்ஆா்எஸ்’ தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை கேமராக்களை மேலும் சில முக்கிய பகுதிகளில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களில் விரைந்து தண்டனை பெற்றுத்தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கல்லூரி மாணவா்கள்: இதேபோல ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் சில கல்லூரி மாணவா்களால் ஏற்படும் மோதல், அடிதடி செயல், வன்முறை ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், மோதல், அடிதடி, வன்முறை ஆகியவற்றில் ஈடுபடும் மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக கல்லூரிகளில் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளஷல் கிஷோா், ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஜி.எம்.ஈஸ்வரராவ், முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா, ரயில்வே காவல் துறை எஸ்.பி. ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.