ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவுக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் சிலா் விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுர அடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன.
இதுகுறித்து சிபிஐ பதிவு செய்த வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடை கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்தாா். ஆனால் அந்த விசாரணைக்குத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது லாலுவுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: லாலுவுக்கு எதிராக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. அதேவேளையில், மனுதாரரின் (லாலு) உடல்நிலையை கருத்தில் கொண்டு, தில்லி சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு அவா் நேரில் ஆஜராக தேவையில்லை.
இந்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, லாலு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் விரைவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.