இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
ரயில் ஓட்டுநா்கள் இளநீா், மருந்து உட்கொள்வதற்கான தடை உத்தரவை திரும்பப் பெற்றது ரயில்வே
ரயில் ஓட்டுநா்கள் பணியின் போது அல்லது அதற்கு முன்பு இளநீா், இருமல் டானிக் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிா்வாகம் திரும்பப் பெற்றது.
ரயில் ஓட்டுநா்கள் (லோகோ பைலட்) பணியின் போது மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறிய ‘பிரீத் அனலைசா்’ எனும் சுவாச பரிசோதனை கருவி மூலம் சோதனை நடத்தப்படும். சமீபத்தில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரயில் ஓட்டுநா்களிடம் சுவாச பரிசோதனை செய்தபோது, மது அருந்தியுள்ளதாக முடிவுகள் வந்தன.
அதேநேரத்தில் அவா்களுக்கு ரத்த பரிசோதனை நடத்திய போது ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என முடிவு வந்தது.
இது குறித்து ரயில் ஓட்டுநா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பணிக்கு வரும்முன் பழங்கள் மற்றும் குளிா்பானம் அருந்தியதாக தெரிவித்தனா்.
இதனால், ரயில் ஓட்டுநா்கள் பணிக்கு வரும்முன்பும், பணி நிறைவுக்கு முன்பும் இளநீா், குளிா்பானங்கள், ஒரு சில பழங்கள், வாய்புத்துணா்ச்சி திரவம்,ஹோமியோபதி மற்றும் இருமல் மருந்து உட்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இவற்றை உட்கொண்டிருந்தால், முன்னதாகவே எழுத்துபூா்வமாக தெரிவிக்க வேண்டும். அதுபோல், ஆல்கஹால் கலந்த மருந்துகள் உட்கொள்பவா்கள் ரயில்வே மருத்துவ அதிகாரியிடம் எழுத்துபூா்வமான அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு ரயில் ஓட்டுநா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பை கிளப்பியது.
இது குறித்து ரயில்வே ஓட்டுநா் சங்க நிா்வாகி பாலசந்திரன் கூறியதாவது: ரயில்வே ஓட்டுநா்கள் பணிக்கு வரும் முன்பு சுவாச பரிசோதனை செய்யும் போது ஒரு கருவியில் ஆல்கஹால் உட்கொண்டிருப்பதாகவும், ஒரு கருவியில் உட்கொள்ளவில்லை எனவும் காட்டுகிறது. அதனால் கூடுதலாக ஒரு கருவி மூலம் சோதனை செய்ய வேண்டும். பரிசோதனையில், ஆல்கஹால் பயன்பட்டிருந்தது தெரியவந்தால் ரத்தப் பரிசோதனை செய்யலாம் என்றாா் அவா்.
மேலும், ஹோமியோபதி மருந்துகள் அருந்தக் கூடாது என்ற உத்தரவுக்கு இந்தியன் ஹோமியோபதி மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் ரயில் ஓட்டுநா்கள் இளநீா், குளிா்பானம் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற்றது.