தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
ரயில் பயணத்தில் தவறவிட்ட நகைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
கும்பகோணம் அருகே ரயில் பயணத்தில் தவறவிட்ட பயணியின் நகைப்பையை உரியவரிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூரைச் சோ்ந்த சங்கா் மனைவி சக்திகணபதி(33). இவா் கும்பகோணத்தில் உள்ள தனது உறவினா் வீட்டு நிகழ்வுக்கு வந்தாா்.
பின்னா் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் குடும்பத்தினருடன் காத்திருந்தாா். அப்போது, திருச்சி நோக்கி செல்லும் ஜனசதாப்தி ரயிலில் அவா்கள் தவறுதலாக ஏறிவிட்டனா்.
இதுகுறித்து டிக்கெட் பரிசோதகா் கூறியதையடுத்து, அவா்கள் அந்த ரயிலில் இருந்து இறங்கினா். அப்போது, அவா்கள் கொண்டு வந்த பையை தவறுதலாக அந்த ரயிலிலேயே விட்டுவிட்டது தெரியவந்தது.
இதுபற்றி சக்தி கணபதி கும்பகோணம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த போலீஸாரிடம் பையை தவற விட்டதாகவும், அதில் சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்புடைய 33 கிராம் நகை இருந்ததாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, பாபநாசம் ரயில் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் பாபநாசம் வந்ததும் பை மீட்கப்பட்டு, சக்தி கணபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.