கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, ...
ரஷிய -உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும்தான் காரணம்: அதிரபர் டிரம்ப்
நியூயார்க்: ரஷியா-உக்ரைன் போர் தொடருவதற்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்த இரு நாடுகளும் அதிகயளவில் வாங்குவதன் மூலம் ரஷியாவுக்கு நிதயுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவிடம் இருந்து சீனாவும் இந்தியாவும் தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் ரஷியா-உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிப்பவர்களில் "முதன்மையானவர்கள்" என்று குற்றம்சாட்டினார்.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்கூட ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதை பெரிய அளவில் குறைக்கவில்லை.
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. இந்த நடவடிக்கை போா் மூலம் ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்தும்.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்க வேண்டுமானால், அந்த நடவடிக்கைகளை ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அமெரிக்கா தலையிடும்.
நான் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற ஏழு மாதங்களில், இந்தியா-பாகிஸ்தான் போா், கம்போடியா-தாய்லாந்து போா், இஸ்ரேல்-ஈரான் போா் என மொத்தம் ஏழு போா்களை நிறுத்தியுள்ளேன். இந்தப் போா்கள் முடிவுக்கு வராது என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால் நான் அந்தப் போா்களை நிறுத்தினேன். அவற்றில் எந்தவொரு போரையும் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. செய்யவில்லை. ஐ.நா. செய்ய வேண்டிய வேலையை, வேறு எந்த நாட்டின் அதிபரோ, பிரதமரோ செய்யாத நிலையில் நான் செய்ததாக டிரம்ப் கூறினார்.
ஐ.நா. பொதுச் சபைக்கு அளப்பரிய ஆற்றல் உள்ளது. ஆனால் அதற்கேற்ப ஐ.நா. செயல்படவில்லை. கடிதம் எழுதுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ள ஐ.நா.வின் வெற்று நடவடிக்கைகளால் போா்களை நிறுத்த முடியாது என்றார்.
உக்ரைனில் போர் உள்பட பல்வேறு மோதல்களால் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய விவாதங்களுக்கு மத்தியில் இந்த கருத்துகள் வந்தன.
இந்தியாவும் அமெரிக்காவும் முன்னதாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்காக ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன, ஆனால் ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டிருந்த இறுதி சுற்று பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக, இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான நம்பிக்கை இருந்தபோதிலும், ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இந்தியாஇறக்குமதி செய்து வருவதால் ஜூலை மாதம் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அடுத்த சில நாள்களுக்குப் பின்னர், கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தார், இது இந்தியப் பொருட்களின் மீதான மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்தியது, இது உலகளவில் மிக உயர்ந்த ஒன்றாகும். இந்தியா தொடர்ந்து ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்வதை மேற்கோள் காட்டி இந்த வரிகள் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்தன.