கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?
பெங்களூரில் கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மூலமாக ரூ. 14 லட்சம் மோசடி நடந்துள்ளது. விரைந்து புகார் அளித்ததன்பேரில் அவரது பணம் மீட்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், இதில் பிரபலங்கள் உள்பட பலரும் சிக்கிக்கொள்கின்றனர்.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் பாஜக எம்.பி. டாக்டர் கே. சுதாகர். இவரது மனைவி ப்ரீத்தி, 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் ஆன்லைன் மோசடியால் ரூ. 14 லட்சம் பணத்தை இழக்க நேர்ந்தது.
ஆனால், உடனடியாக புகார் அளித்ததன் அடிப்படையில் பெங்களூர் மாநகர காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அவரது பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று கூறி ப்ரீத்தியை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளனர். காலை 9.30 மணி முதல் மாலை 4.55 மணி வரை டிஜிட்டல் அரெஸ்ட்டில் இருந்ததாக ப்ரீத்தி கூறுகிறார்.
ப்ரீத்தியின் வங்கி தொடர்பான ஆவணங்களை சத்பத்கான் என்பவர் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளதாகவும் அதற்காக சத்பத்கான் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் (அதற்கான புகைப்படங்களை காட்டி நம்பச் செய்துள்ளனர்) ப்ரீத்தியும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறி ரூ. 14 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ப்ரீத்தியும் வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் வங்கிக்குச் சென்று தனது கணக்கில் இருந்து ரூ. 14 லட்சம் பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.
அவர் வீட்டிற்குத் திரும்பியபோது சந்தேகப்பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறை வந்து விசாரித்ததில் நடந்த விஷயம் தெரிய வந்தது.
உடனடியாக அவர்கள் சைபர் கிரைமுக்கு தகவல் தெரிவித்ததுடன் காவல்துறையிலும் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து சைபர் கிரைம் அதிகாரிகள், உடனடியாக வங்கியில் தொடர்புகொண்டு பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை தற்காலிகமாக நிறுத்திவைத்தனர். பின்னர் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் அந்த பணம் ப்ரீத்தியின் வங்கிக் கணக்கிற்கே மாற்றப்பட்டது.
ஆன்லைன் மோசடிகளில் பாதிக்கப்படுவோர் பயப்பட வேண்டாம், உடனடியாக அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு காவல்துறைக்கு மற்றும் சைபர் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தால் பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
உங்களுடைய மொபைல் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் மோசடி கும்பல், தங்களை சிபிஐ / வருமானவரித் துறை/ காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, நீங்களோ உங்கள் உறவினரோ மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவோ குற்றம் செய்திருப்பதாகவோ உங்களை நம்பும்படி செய்து பின்னர் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்கிறோம் என்று ஆன்லைனிலே வைத்திருக்கின்றனர்.
பல மணி நேரம், பல நாள்கள்கூட இப்படியே இருக்க வைக்கின்றனர். பின்னர் இந்த குற்றங்களில் இருந்து தப்பிக்க பணம் கேட்டு மிரட்டி பணப்பரிமாற்றம் செய்ய வைக்கின்றனர். இதன் மூலமாக பலரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
எனவே, இதுபோன்ற விடியோ அழைப்புகள் வந்தால் சற்றும் யோசிக்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு உடனடியாக காவல்துறையில்/ சைபர் குற்றப்பிரிவில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
Karnataka MP wife duped of Rs 14 lakh in digital arrest scam; police retrieve funds
இதையும் படிக்க | 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: முழு விவரம்!