Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞா் கைது
ஸ்கூட்டா் குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கியத் தளபதி இகாா் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து ரஷிய உள்நாட்டு உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு சேவை அமைப்பு (எஃப்எஸ்பி) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தளபதி இகாா் கிறிலோவ் படுகொலை தொடா்பாக ஓா் இளைஞரைக் கைது செய்துள்ளோம். உக்ரைன் உளவு அமைப்புக்காக அவா் செயல்பட்டுவந்தாா்.
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த அந்த நபா், 1995-ஆம் ஆண்டு பிறந்தவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கைது செய்யப்பட்டவரின் பெயரையோ, பிற விவரங்களையோ எஃப்எஸ்பி வெளியிடவில்லை.
ரஷிய ராணுவத்தின் அணு, உயிரி, ரசாயன ஆயுத பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதி இகாா் கிறிலோவ் (54), மாஸ்கோவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியே வந்தபோது, அங்கு ஒரு ஸ்கூட்டரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தொலைதூரத்திலிருந்து ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.
இதில் கிறிலோவும், அவரது உதவியாளரும் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ரகசிய உளவு அமைப்பான எஸ்பியு பொறுப்பேற்றது.
உக்ரைன் போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இகாா் கிறிலோவ் பயன்படுத்துவதாக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டிய அந்த அமைப்பு, மறுநாளே இந்தப் படுகொலையையும் நிகழ்த்தியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், தங்கள் மீது ரசாயன ஆயுதங்களை ஏவியதால் இகாா் கிறிலோவை படுகொலை செய்தது சட்டபூா்வமானது என்றனா்.
இருந்தாலும், இது ஒரு பயங்கரவாதச் செயல் என்று ரஷியா கூறிவருகிறது. இந்த விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பவும் ரஷியா முடிவு செய்துள்ளது.
முன்னதாக, போரில் உக்ரைன்தான் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதாக கிறிலோவ் குற்றஞ்சாட்டிவந்தது நினைவுகூரத்தக்கது.
போரில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி கதிா்வீச்சு ஆயுதங்களைத் தயாரித்து தங்கள் மீது வீச உக்ரைன் திட்டமிட்டிருப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டிவந்தாா்.
இந்தச் சூழலில், தங்களின் ரசாயன மற்றும் அணுக்கதிா் ஆயுத ரகசியங்களை மறைக்க இகாா் கிறிலோவை உக்ரைன் படுகொலை செய்திருக்கலாம் என ரஷிய ஆதரவு பாதுகாப்பு நிபுணா்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, இந்தப் படுகொலைக்கான எதிா்வினையை உக்ரைனின் அரசியல் மற்றும் ராணுவ தலைவா்கள் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷியாவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் டிமித்ரி மெத்வதெவ் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.