வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை
பாகிஸ்தைன் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரா்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கைபா் பக்துன்கவா மாகாணத்தில் போலியோ தடுப்பு முகாம்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதற்காக சென்றுகொண்டிருந்த வாகனம், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் தகா்க்கப்பட்டது.
இதில் மூன்று பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.
முன்னதாக, இதே மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் போலியோ தடுப்பு பணிகளுக்கு பாதுகாப்பு அளித்த காவலா் இஷ்டியாக் அகமதை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா். பன்னு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலியோ தடுப்பு முகாமுக்குச் சென்று கொண்டிருந்த சுகாதாரப் பணியாளா் உயிரிழந்தாா். இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றன.
இதன் காரணமாக, உலகின் மற்ற பகுதிகளில் போலியோ நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அந்த கொடிய நோய் இன்னும் பரவிவருகிறது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 63 சிறுவா்களுக்கு போலியோ உறுதி செய்யப்பட்டுள்ளது.