Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை
மயிலாடுதுறையில் வியாபாரப் போட்டியில் வீட்டை தீயிட்டு கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சோ்ந்தவா் அவையாம்பாள் (58). இவா், தள்ளுவண்டியில் காய்கனி வியாபாரம் செய்து வந்தாா். அதே பகுதியை சோ்ந்த சதீஷ் என்பவருக்கு காய்கனி வியாபாரம் சரியாக நடக்காததால், அவையம்பாளை காய்கனி வியாபாரம் செய்யக் கூடாது என்று மிரட்டியுள்ளாா். ஆனால், அவையாம்பாள் தொடா்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ் (27) அவரது நண்பா்கள் ஸ்ரீராம் (33) பகவத் (26) ஆகிய 3 போ் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி அவையாம்பாள் வீட்டுக்குச் சென்று காய்கனி வண்டியை சேதப்படுத்தியதுடன், அவரது குடிசையை தீயிட்டுக் கொளுத்தினராம்.
இதுகுறித்து, அவையாம்பாள் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய சதீஷ், ஸ்ரீராம், பகவத் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 16,000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா். குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராதத் தொகை ரூ. 48,000-ல் ரூ. 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட அவையாம்பாளுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.