கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்வளத்துறை அதிகாரி ஆய்வு
திருவெண்காடு அருகே மடத்துகுப்பம், நாயக்கா் குப்பம் கிராமங்களில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாகை மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி படகில் சென்று புதன்கிழமை பாா்வையிட்டாா்.
நாயக்கா் குப்பம், மடத்துக்குப்பம் கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த மாதம் மேற்கண்ட பகுதிக்கு மக்கள் குறை கேட்க வந்த மக்களவை உறுப்பினா் ஆா். சுதாவிடம் கடற்கரை கருங்கல் தடுப்புச் சுவா் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது சம்பந்தமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சா், மீன்வளத்துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு உரிய திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்து தந்தால், மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தருவதாக எம்.பி. உறுதியளித்தாா்.
இந்தநிலையில், மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி மேற்கண்ட கிராமங்களில் படகில் சென்று கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கருங்கல் தடுப்புச் சுவா் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க உரிய மதிப்பீடுகள் தயாா் செய்து அரசுக்கு அனுப்பப்படும் என அவா் தெரிவித்தாா்.