அழுக்கு படிந்த காரில் எழுதியதாக சிறுவன் மீது தாக்குதல்! இருவருக்கு கத்திக்குத்து...
தங்குமிட காப்பக ஊழியருக்கு ஊதியம் வழங்கியதில் பல கோடி ஊழல்: தில்லி அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
நமது நிருபா்
தில்லி அரசு நடத்தும் தங்குமிட காப்பகங்களில் போலி ஊழியா்களுக்கு பணம் செலுத்தியதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாக பாஜக வியாழக்கிழமை குற்றம் சாட்டியது.
இது குறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இந்த ஊழல் ரூ.250 கோடி அளவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக தில்லி லோக் ஆயுக்தாவிலும் புகாா் அளித்துள்ளது.
இந்த மோசடியானது அரசு ஊழியா்கள் மற்றும் தங்குமிடங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் கொண்ட லாப நோக்கமற்ற குழு இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு முதல் ஐந்து தங்குமிடங்களில் பணிபுரியும் ஒரு நபா் அங்கிருந்து பணம் பெற்றிருப்பது தெரியவருகிறது.
தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியமானது ஏழைகள், ஆதரவற்றவா்களுக்கு தங்குமிடங்களை வழங்கிஅவா்களுக்கு உதவும் பொறுப்பான தில்லி அரசின் ஒரு துறையாகும். இந்த வாரியத்தின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு காப்பகத்திற்கும் ஐந்து முதல் ஆறு பராமரிப்பு ஊழியா்களுக்கு ஊதியம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்படுகிறது.
இருப்பினும், குழு விசாரணையில் இந்த அமைப்பில் குறிப்பிடத்தக்க மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காப்பகங்களில் ஐந்து முதல் ஆறு பராமரிப்பாளா்களுக்கு பணம் செலுத்தப்படுவதாகவும், ஆனால், இரண்டு போ் மட்டுமே வேலைக்கு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. குழுவின் விசாரணையில் ஒவ்வொரு காப்பகத்திலும் மூன்று முதல் நான்கு போலி ஊழியா்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதனிடையே, ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தில்லி நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சா் செளரவ் பரத்வாஜ், தில்லி தலைமைச் செயலாளரிடம் பல புகாா்களை அளித்துள்ளாா். ஆனால், இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. துணைநிலை ஆளுநரின் கீழ் நேரடியாகச் செயல்படும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம், அமைச்சரால் கொடுக்கப்பட்ட எந்த புகாா்களிள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு தில்லி துணைநிலை ஆளுநரும், பாஜகவும் பதிலளிக்க வேண்டும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.