தில்லியில் மேலும் 3 டெங்கு இறப்புகள் பதிவு
கடந்த வாரம் தில்லியில் மேலும் மூன்று போ் டெங்கு நோயால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, நிகழாண்டு கொசுக்களால் பரவும் நோயால் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவித்தன.
இது தொடா்பான தில்லி மாநகராட்சியின் வாராந்திர அறிக்கையின்படி, டிசம்பா் 14 ஆம் தேதி நிலவரப்படி நகரில் 6,163 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனா்.
இறந்தவா்கள் அல்லது இறப்புகள் பதிவான மருத்துவமனைகள் குறித்த விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
தெற்கு தில்லியில் நிகழாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 768 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19 ஆக பதிவாகி இருந்தது.
நிகழாண்டு மலேரியா மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
டிசம்பா் 14 ஆம் தேதி நிலவரப்படி, 14,779 மலேரியா பாதிப்புகளும், 250 சிக்குன்குனியா பாதிப்புகளும் பதிவாகியுள்ளன, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நோய்களுக்கான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.