ராமேசுவரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து! ஜூலையில் தொடக்கம்?
சென்னை: ராமேசுவரம்- தலைமன்னாருக்கிடையே இரண்டாவது பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஜூலை மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். வானிலை மாற்றம் காரணமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் இக்கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2024 நவம்பரில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மழைக்காலம் காரணமாக நவம்பர் 5 ஆம் தேதி நிறுத்தப்பட்ட சேவை வானிலை சீரடைந்து, தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை(பிப்.22) மீண்டும் தொடங்கியது.
நாகையிலிருந்து 83 பயணிகள் காங்கேசன்துறைக்கு சென்ற நிலையில், பிற்பகல் காங்கேசன்துறையில் இருந்து நாகைக்கு 85 பயணிகள் வந்தனா்.
பயணக் கட்டணமாக நாகையிலிருந்து - காங்கேசன்துறைக்கு ரூ. 4,500-ம், காங்கேசன்துறையிலிருந்து - நாகைக்கு ரூ. 4,000-மும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் 10 கிலோ வரை இலவசமாக பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு இரண்டாவது பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஜூலை மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என கப்பல் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்-தலைமன்னாருக்கான தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடக்கும், 250 பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இயக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் தெரிவித்துள்ளது. கடல்சார் வாரியம் ராமேசுவரத்தில் ஒரு தற்காலிக படகுத்துறையை அமைத்து வருகிறது, மேலும் சுங்க மற்றும் குடியேற்ற வசதிகளை அமைப்பதற்காக வெளியுறவு அமைச்சக அனுதியையும் கோரியுள்ளது.
தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா: விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!
கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எம்.வள்ளலார் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"நாகப்பட்டினம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து வா்த்தக ரீதியாகவும், நட்பு ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் மீண்டும் இந்திய - இலங்கை நட்புறவுக்குப் பாலமாக அமையும். மேலும் இந்தியாவில் இருந்து இலங்கை வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நுழைவாயிலாகவும் இருக்கும். தேவையைப் பொறுத்து ஒரு நாளைக்கான கப்பல் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடும்" என்று கூறினார்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் ராமேசுவரத்தில் ஒரு நிரந்தர பயணிகள் முனையத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடி தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, இரு நாடுகளிலும் ராமாயணப் பாதையை ஆராய விரும்பும் யாத்ரீகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத் தலைவர் பி. அசோகா கூறினார்.
இலங்கையில் உள்நாட்டுப் போா் தீவிரமடைவதற்கு முன்னா், தென்னிந்தியா மற்றும் இலங்கையும் "சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா பயணத்திட்டங்களில் இடம் பெறுவது 1980 முற்பகுதி வரை வழக்கமாக இருந்தது. அந்த நாட்டின் உள்நாட்டு அமைதியின்மைக்குப் பிறகு படகு சேவை நிறுத்தப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்.
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2023 இல் நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.