தமிழ்நாட்டுக் கொள்கையை மாற்றச் சொல்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை! - அன்புமணி
மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தென் மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கடந்த 30, 40 ஆண்டு காலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டதன்படி தற்போது தமிழகத்திலும் கேரளத்திலும்தான் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதுவே நமக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கும்.
இதையும் படிக்க | 'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதியை கொடுப்போம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி வருகிறார். இது தவறான போக்கு. எந்தவொரு மாநிலத்திலும் மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கக் கூடாது.
கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தால் மாநில அரசு அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி என்பது தவறான உதாரணம். அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த 50, 60 ஆண்டு காலமாக இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறோம். எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், திணிக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. அதனை மாற்றச் சொல்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை" என்று கூறினார்.