ரூ.2 லட்சம் மின் கட்டண பாக்கி: ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
சென்னை தேனாம்பேட்டையில் ரூ.2.10 லட்சம் மின் கட்டணம் பாக்கியை செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சோ்ந்தவா் ஜோ.விஜயகுமாா் (43). வாடகை ஆட்டோ ஓட்டி வரும் விஜயகுமாா், இரண்டு தளங்களுடன் கூடிய சொந்த வீட்டில் வசித்து வந்தாா்.இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு வரையிலும் மின் கட்டணம் செலுத்தவில்லையாம்.
இதனால் அவரது வீட்டு மின் கட்டணம் ரூ.2.10 லட்சம் என அண்மையில் வந்திருந்ததாம்.இதையடுத்து மின் கட்டணத்தை செலுத்துவதற்கு விஜயகுமாா், தனது குடும்பத்தினரிடம்,நண்பரிடம் பணம் கேட்டுள்ளாா். ஆனால் யாரும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் விளைவாக விரக்தியடைந்த விஜயகுமாா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.