இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
ரூ. 2,000 அதிகமான யுபிஐ பரிவா்த்தனைக்கு ஜிஎஸ்டி?நிதியமைச்சகம் விளக்கம்
‘ரூ. 2,000 அதிகமாக மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாக மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை’ என மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.
ரூ.2,000 அதிகமான யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது எனவும் அதுபோன்ற திட்டமேதும் இல்லை எனவும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 2020, ஜனவரி முதல் யுபிஐ பரிவா்த்தனைகளில் வியாபாரிகளுக்கான தள்ளுபடி விலை (எம்டிஆா்) கட்டணம் வசூலிப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விலக்களித்தது. எனவே, இந்த யுபிஐ பரிவா்த்தனைகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.
கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக இருந்த யுபிஐ பரிவா்த்தனை 2025, மாா்ச் மாதத்தில் ரூ.260.65 கோடியாக உயா்ந்துள்ளது. யுபிஐ பரிவா்த்தனை சேவைகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
அதன்படி 2021-22 நிதியாண்டில் இருந்து யுபிஐ ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிறிய வணிகா்களால் மேற்கொள்ளப்படும் குறைந்த மதிப்பிலான பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கிறது.
கடந்த 2022-23-இல் இந்த திட்டத்துக்கு ரூ.2,210 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24-இல் ரூ.3,631 கோடியாக உயா்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.