பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - ந...
`ரூ.52 கோடிக்கு ஏலம் போன `ஒற்றை வாழைப்பழ’ ஆர்ட் - அப்படி என்ன தான் இருக்கு?!
இத்தாலிய கலைஞரான மவுரிசியோ கட்லெலனின் `காமெடியன்' எனும் கருத்தியல் கலைப்படைப்பு, நேற்று நியூயார்க்கில் நடந்த சோதேபியின் ஏலத்தில் $6.2 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இப்படைப்பானது ஓர் ஒற்றை வாழைப்பழத்தை டக்ட் டேப் (duct tape) கொண்டு தரையில் இருந்து சரியாக 16cm உயரத்தில் ஓர் சுவற்றில் ஒட்டப்பட்டதாகும்.
கடந்த 2019ம் ஆண்டு இதே படைப்பு $120,000-க்கு விற்பனை ஆனபோது, அது சமுக வலைதளத்தையே புரட்டிப்போட்டது. மேலும் அக்கலையின் அர்த்தம் குறித்த பெரும் விவாதமும் எழுந்தது.
கவுண்டமணி செந்தில் கரகாட்டக்காரன் படத்தில் ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழங்கள் வாங்கிய நிலையில், ஒரு வாழைப்பழத்துக்கா இந்தனை விலை என்று விவாதங்கள் களைகட்டியது. ஆனால் இன்று இந்திய மதிப்பில் சுமார் ₹52,37,38,566 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. $1 மில்லியன் முதல் $1.5 மில்லிலன் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்த்து $ 800,000 இல் ஏலத்தை தொடங்கிய ஏல நிறுவனத்துக்கே இது மிகப்பெரிய அதிர்ச்சிதான்.
ஏலதாரர் ஆலிவர் பார்கர் இப்படைப்பை `iconic’ மற்றும் `disruptive' என்று குறிப்பிட்டு, ``ஏலத்தில் ஒரு வாழைப்பழத்தை விற்பது, நான் என்றும் சொல்ல நினைத்திராத வார்த்தைகள்" என்று வேடிக்கையாகக் கூறினார். இப்படைப்பை பெற்றவர் சீன சேகரிப்பாளரும், கிரிப்டோகரன்சி தளத்தை நிறுவியவருமான ஜஸ்டின் சன் ஆவார்.
அவர் கூறுகையில், "இது ஓர் கலைபடைப்பு மட்டும் அல்ல, இது கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோகரன்ஸி சமூகத்தை ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வை பிரதிபலிக்கிறது. இப்படைப்பு எதிர்காலத்தில் இன்னும் பல சிந்தனைகளையும் விவாதங்களையும் ஊக்குவிக்கும் என நான் நம்புகிறேன். மேலும் இது வரலாறின் ஒரு பகுதியாகும் என நான் நம்புகிறேன்" என்றார்.
இது ஓர் கருத்தியல் கலைப்படைப்பு என்பதால் இதன் பொருள்கள் ஒவ்வொரு முறையும் மாற்றப்படுகின்றன. ஜஸ்டின் சன் அவர்களுக்கு ஒரு டக்ட் டேப் ரோல் மற்றும் ஓர் வாழைப்பழம், நம்பகத்தன்மைச் சான்றிதழும், இப்படைப்பை நிறுவுவதற்கான அதிகாரப்பூர்வ வழிமுறைகளும் கிடைக்கும் .
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு "காமெடியன் ", Art Basel Miami Beach கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டது. அப்படைப்பானது ஓர் மியாமி மளிகைக் கடையில் வாங்கிய வாழைப்பழத்தினால் உருவாக்கப்பட்டது. அப்படைப்பினைக் காண விரைவில் கூட்டம் கூடியது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் டேவிப் பட்டுனா எனும் செயல்திறன் கலைஞர் அப்பழத்தை சுவற்றில் இருந்து எடுத்து உண்டது நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை திகைப்புக்குள்ளாக்கியது. பிறகு அதுவும் கலையின் ஒர் பகுதியெனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்படைப்பு அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையிலும், அதன் மூன்று பதிப்புகளும் விற்பனையானது. அதில் ஒன்று, நியூயார்க்கில் உள்ள தி கக்கென்ஹெய்ம் அருங்காட்சியகத்துக்கு ( The Guggenheim Museum ) நன்கொடையாக வழங்கப்பட்டது .
இந்நிகழ்வுகளை அடுத்து, 2021ல் தி ஆர்ட் செய்தித்தாளில் கட்டெலன், 'காமெடியன் ' என்பது நகைச்சவை அல்ல எனவும் நாம் எதை மதிக்கின்றோம் என்பதன் பிரதிபலிப்பு" எனவும் கூறினார்.
2023ம் ஆண்டு தென் கொரியா நாட்டில் சியோலில் உள்ள லீயம் அருங்காட்சியகத்தில் "காமெடியன்" காட்சிபடுத்தப்பட்டிருத்தபோதும், சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓர் கலை மாணவரால் உண்ணப்பட்டது. பசியில் இருந்ததால் அவ்வாறு செய்ததாக மாணவர் கூறியதைத் தொடர்ந்து அப்பழம் மாற்றி வைக்கப்பட்டது.
தற்போது அப்படைப்பை வாங்கியுள்ள ஐஸ்டின் சன்னும் அப்பழத்தை உண்ணவிருப்பதாகக் கூறியுள்ளார்."வரும் நாட்களில் நான் தனிப்பட்ட முறையில் இந்த தனித்துவமான கலை அனுபவத்தின் ஓர் பகுதியாக அவ்வாழைப்பழத்தை கலையின் வரலாறு மற்றும் பிரபலமான கலாசாரத்தில் அதனது மதிப்பை கவுரவப்படுத்த அதனை உண்பேன்" எனக் கூறியுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...